4 பாடங்களில் முழு மதிப்பெண்கள் நடைபாதை வியாபாரியின் மகள் அசத்தல்
மணலியில் நடைபாதை வியாபாரியின் மகள், 12ம் வகுப்பு தேர்வில், நான்கு பாடங்களில் சென்டம் எடுத்ததுடன், 1169 மதிப்பெண் எடுத்து சாதனைபடைத்துள்ளார்.
மணலி, பலராமன் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி. நடைபாதையோரம், துணி வியாபாரம் செய்து வருகிறார். அவர் மகள் எஸ். ஹேமலதா. மணலியில் உள்ள, அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில், 1169 மதிப்பெண் எடுத்துள்ளார். பொருளியல், வணிகவில், வணிக கணிதம், கணக்குப்பதிவியல் ஆகிய நான்கு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
இவர் பயின்ற மணலி அரசு மேனிலைப் பள்ளி 87 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. 12 பேர் சென்டம் மதிப்பெண்களும், 25 மாணவ, மாணவியர் 1000க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மாணவி ஹேமலதா கூறுகையில், ‘‘பத்தாம் வகுப்பு தேர்வில், அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களில் 100 மதிப்பெண்களுடன் 480 மதிப்பெண் எடுத்திருந்தேன். தற்போது பிளஸ் டூ தேர்வில், நான்கு பாடங்களில் முழுமதிப்பெண் பெற்று 1169 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இது எதிர்பார்த்தது தான். தமிழ், ஆங்கிலத்தில் மதிப்பெண்கள் குறைந்தது கவலையாக உள்ளது’’ என்றார்.
‘‘எனக்கு, சி.ஏ., படிக்க ஆசை. ஆனால், அதற்குப் பணம் நிறைய செலவாகும் என கூறப்படுகிறது. நடைபாதை வியாபாரியான என் தந்தை அவ்வளவு தொகையை திரட்ட முடியுமா? என தெரியவில்லை. யாரேனும் உதவி கரம் நீட்டினால், நிச்சயம் படிப்பேன்’’ என்றும் ஹேமலதா கூறினார்.
No comments:
Post a Comment