Thursday, 28 June 2018

வேதியியல் படிக்கிறேன் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கோவை மாணவி கீர்த்தனா ரவி முதலிடம்

தி இந்து

‘‘பொறியியல் படிக்க விருப்பமில்லை’’ - தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பேட்டி
#வேதியியல் படிக்கிறேன்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கோவை மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பிடித்தார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று (வியாழக்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் கோவையை சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பெற்றார். முதல் பத்து இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 10 மாணவ, மாணவியர் 200க்கு 200
முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா ரவி:

கோவை சாய்பாபா காலணியை சேர்ந்தவர் மாணவி கீர்த்தனா. இவருடைய தந்தை ரவி பொறியாளராக பணிபுரிகிறார். தாயார் பாலாம்பிகா ரவி பாலக்காட்டிலுள்ள பிஎஸ்எஸ் பி.எட். கல்லூரியில் முதல்வராக பணிபுரிகிறார். மாணவி கீர்த்தனா பாலக்காட்டில் உள்ள பிஎஸ்எஸ் குருகுலம் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். கேரளா பாடத்திட்டத்தில் படித்த இவர் 12-ம் வகுப்பில் 1200 மதிப்பெண்களுக்கு முழு மதிப்பெண்களையும் பெற்றார்.

முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா ரவி கூறும்போது, “தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்து வருகிறேன். நேர்காணல் மூலம் நான் அந்த படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். பள்ளியில் படிக்கும்போது எனக்கு சிறந்த வேதியியல் ஆசிரியர் கிடைத்தார்.

வேதியியல் மீதான ஆர்வத்தை அந்த ஆசிரியர்தான் எனக்கு தூண்டி விட்டார். எனக்கு பொறியியல் படிக்க விருப்பமில்லை. இருந்தும் பொறியியல் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தால் வேதியியல் பொறியியலைத் தான் தேர்ந்தெடுத்திருப்பேன். வேதியியல் படிப்பை தேர்ந்தெடுத்தது என்னுடைய விருப்பம் தான். என் பெற்றோருக்கு அதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை” என்றார்.

No comments:

Post a Comment

01.01.2026 Happy New Year